இறைவனைப் புகழ்வதற்காகவோ அல்லது மனதில் எழும் உணர்ச்சிகளை இறைவனிடம் வெளிப்படுத்துவதற்காகவோ அல்லது வேண்டுதலையோ குறிக்குமாறு இந்திய இசையுடன் பாடப்படும் பாடல்கள் கீர்த்தனைகள் என்றழைக்கப்படுகின்றன. கீர்த்தனைகள் பொதுவாக பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்படுவது வழக்கம். சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப் பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும். கீர்த்தனைகளில் சுரத்தை விட சொற்களுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
முன்பு சபைகளில் ஆராதனைகளில் ஞானப்பாட்டுகள் (பாமாலைகள்) என்றழைக்கப்படும் பாடல்களே பாடப்பட்டு வந்தன. அவை மேற்கத்திய ராகத்துடனும் பெரும்பாலும் ஆங்கிலப் பாடல்களின் மொழிபெயர்ப்புகளுமாகவே இருந்தன. அவற்றைப் பாடுவதில் சில சிரமங்கள் இருந்தன. அதென்னவெனில் ஆங்கில ராகத்துக்கேற்ப வார்த்தைகளை பிரித்து பிரித்து படிக்கும் போது சமயத்தில் அவை கேட்பவர்களுக்கு புரியாமல் இருந்தன. சபைகளில் இதைப் பாடக் கேட்ட புற மார்க்கத்தினர் கேலி பண்ணினர். அதற்கு வேறு மாற்றும் இல்லாத அக்காலத்தில் தான் வேத நாயகம் சாஸ்திரியார் போன்ற தேவ மனிதர்கள் எழும்பி நம் நாட்டு இசைப் படி கீர்த்தனைகளைப் பாடி இறைப் புகழ் நாடி பல பாடல்களை இயற்றினர். அவ்வாறு இயற்றப்பட்ட பாடல்கள் பாடுவதற்கு எளிமையாகவும் எளிதில் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியனவாகவும் இருந்தன. சந்தியாகு ஐயர் போன்ற பக்தர்கள் ஆங்கிலப் பாடல்களையே பொருள்மாறாது கீர்த்தனைப் பாடல்களாக மாற்றினர். அப்படிப் பாடப் பட்ட ஒரு பாடல்களில் ஒன்றுதான் “தேவனே நான் உமதண்டையில்” இது Nearer, my God, to Thee (உம்மண்டை தேவனே - பாமாலை) என்ற பாடலினை ஒட்டி எழுதப்பட்ட தமிழ் கீர்த்தனை ஆகும். இதை இயற்றியவர் வேதநாயகம் சாஸ்திரியார் என்று அனேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு. மேலே சொன்ன சந்தியாகு ஐயர் தான் இதை இயற்றியவர்.
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைப் பாடல்கள் சபைகளில் மறுமலர்ச்சியையும் பக்தி விருத்தியயியும் உண்டு பண்ணின. வேத நாயகம் சாஸ்திரியார் போன்ற தமிழறிந்த பண்டிதர்களிலிருந்து படிப்பறியா பாமரர்கள் வரை பலர் கீர்த்தனைகளை உண்டு பண்ணினர். இன்று பல கீர்த்தனைகளை நாம் இழந்து விட்டாலும் கூட இப்போது இருப்பவற்றை பாடி பத்திரப்படுத்துவது அவசியமானது.
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகளின் தனிச்சிறப்பு என்று சொல்ல வேண்டுமானால் அதன் எளிமையே.