Showing posts with label சந்தியாகு ஐயர். Show all posts
Showing posts with label சந்தியாகு ஐயர். Show all posts

Sunday, November 14, 2010

எனக்குப் பிடித்த கீர்த்தனைகள் 1

கிறிஸ்தவ கீர்த்தனைகள் பாடலில் எவ்வளவோ சிறந்த பாடல்கள் இருப்பினும்  மனதுக்குப் பிடித்தப் பாடல்களின் வரிசையில் முதலில் வருவது “ தேவனே நான் உமதண்டையில்” பாடல் தான். காலங்கள் கடந்தும் இன்றும் மிகச் சிறப்பான கீர்த்தனைப் பாடலாக பலரும் கருதுவது இந்தப் பாடலைத்தான்.

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

தென் தமிழக பாரம்பரிய சபைகளில் மிகவும் பிரபலமாக விளாங்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். உண்மையாகப் பாடலின் பொருளை உணர்ந்து பாடும் பக்தர் எவரும் இப்பாடலை படிக்கும்போதே தேவ பிரசன்னத்தை அனுபவிக்கலாம். அனேகர் இந்தப்பாடலை இய்ற்றியது வேத நாயகம் சாஸ்திரியார் என்று நினைக்கின்றனர். இப்பாடலை இயற்றியவர் சந்தியாகு ஐயர் (புராட்டஸ்டாண்டு சபைகளில் போதகரை ஐயர் என்றுதான் அழைப்பர்) ஆவார். இவர் மதுரை ஜில்லாவில் போதக ஊழியம் செய்துவந்தார்.

பெரும்பாலும் அக்காலத்தில் ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கத்தையே பாமாலைகளாகப் பாடினர். இன்றுக் கூட தென் இந்திய திருச்சபைகளில் அவ்வாறுதான் பாடுகின்றனர். ஆங்கிலப்பாடல்களை அப்படியே தமிழில் பாடுவது புதிதாக கேட்பவர்க்கு அன்னியமானதாக இருந்தது. என்னதான் அவற்றின் இராகம் இனிமையானதாக இருந்தாலும் வார்த்தைகளை இழுத்து இழுத்து பாடுவது தமிழ் இசை அறிந்தவர்களுக்கு அவ்வாறு பாடுவதை விட நல்ல தமிழிசையில் பாடினால் நலமாயிருக்கும் என்ற எண்ணம் அப்போதிருந்தே இருந்துவந்தது. ஒரு சிலர் ஆங்கிலப்பாடல்களை பொருள் மாறாது தமிழ் யாப்பிலக்கணத்தின் படி தமிழ் இசையில் இசைத்து தந்தனர். அவர்களில் சந்தியாகு ஐயரும் ஒருவர்.

இப்பாடல் உம்மண்டை தேவனே நான் சேர்வதே என்ற பாடலினை தழுவி இயற்றப்பட்டது ஆகும். இப்பாடலின் மூல பாடல் உம்மண்டை தேவனே யாக்கோபின் வாழ்க்கையை பக்தனின் வாழ்க்கையுடன் இணைத்து பாடும் ஒரு அழகான பாடல் ஆகும்.

இப்பாடலைப் பற்றிய ஒரு உப செய்தி
ஒரு நாள் டிவியில் ஒரு சினிமா பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அந்த பாடலின் இராகம் எனக்கு நன்கு பரிட்சயமானதாக இருந்தது. அது என்ன என்று யோசித்துப் பார்த்தால் அட அது தேவனே நான் உமதண்டையில் இராகத்தில் அப்படியே எழுதப்பட்டிருந்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம்.
இசை ஞானி இளையராஜா என்று போற்றப்படுபவரே இப்படி ஒரு கிறிஸ்தவப்பாடல் இராகத்தை காப்பியடித்துவிட்டாரே என்ற ஆதங்கம் (உள்ளூர சந்தோசம்). அது ரஜினி படம் என்று நினைக்கின்றேன்.

பாடல் பெயர் : தாயும் நானே தந்தையும் நானே

இப்பாடலை இதுவரை கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்டுப் பாருங்கள்.PLEASE CLICK For instrumental of this songஉம்மண்டை தேவனே பாடல் மிகவும் நல்ல பாடல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைவிட தேவனே நான் உமதண்டையில் பாடல் மிகவும் சிற்ப்பாக உள்ளது. இது போன்ற தமிழ் பாடல்கள் ஏன் இப்போது வருவதில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.


தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

http://www.youtube.com/watch?v=hivsOjzE2N0 

Wednesday, April 14, 2010

கீர்த்தனைகள் என்றால் என்ன? ஒரு அறிமுகம்

இறைவனைப் புகழ்வதற்காகவோ அல்லது மனதில் எழும் உணர்ச்சிகளை இறைவனிடம் வெளிப்படுத்துவதற்காகவோ அல்லது வேண்டுதலையோ குறிக்குமாறு இந்திய இசையுடன் பாடப்படும் பாடல்கள் கீர்த்தனைகள் என்றழைக்கப்படுகின்றன. கீர்த்தனைகள் பொதுவாக பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்படுவது வழக்கம்.  சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப் பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும். கீர்த்தனைகளில் சுரத்தை விட சொற்களுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முன்பு சபைகளில் ஆராதனைகளில் ஞானப்பாட்டுகள் (பாமாலைகள்) என்றழைக்கப்படும் பாடல்களே பாடப்பட்டு வந்தன. அவை மேற்கத்திய ராகத்துடனும் பெரும்பாலும் ஆங்கிலப் பாடல்களின் மொழிபெயர்ப்புகளுமாகவே இருந்தன. அவற்றைப் பாடுவதில் சில சிரமங்கள் இருந்தன. அதென்னவெனில் ஆங்கில ராகத்துக்கேற்ப வார்த்தைகளை பிரித்து பிரித்து படிக்கும் போது சமயத்தில் அவை கேட்பவர்களுக்கு புரியாமல் இருந்தன.  சபைகளில் இதைப் பாடக் கேட்ட புற மார்க்கத்தினர் கேலி பண்ணினர். அதற்கு வேறு மாற்றும் இல்லாத அக்காலத்தில் தான் வேத நாயகம் சாஸ்திரியார் போன்ற தேவ மனிதர்கள் எழும்பி நம் நாட்டு இசைப் படி கீர்த்தனைகளைப் பாடி இறைப் புகழ் நாடி பல பாடல்களை இயற்றினர். அவ்வாறு இயற்றப்பட்ட பாடல்கள் பாடுவதற்கு எளிமையாகவும் எளிதில் அர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியனவாகவும் இருந்தன. சந்தியாகு ஐயர் போன்ற பக்தர்கள் ஆங்கிலப் பாடல்களையே பொருள்மாறாது கீர்த்தனைப் பாடல்களாக மாற்றினர். அப்படிப் பாடப் பட்ட ஒரு பாடல்களில் ஒன்றுதான் “தேவனே நான் உமதண்டையில்” இது  Nearer, my God, to Thee (உம்மண்டை தேவனே - பாமாலை) என்ற பாடலினை ஒட்டி எழுதப்பட்ட தமிழ் கீர்த்தனை ஆகும். இதை இயற்றியவர் வேதநாயகம் சாஸ்திரியார் என்று அனேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு. மேலே சொன்ன சந்தியாகு ஐயர் தான் இதை இயற்றியவர்.
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைப் பாடல்கள் சபைகளில் மறுமலர்ச்சியையும் பக்தி விருத்தியயியும் உண்டு பண்ணின. வேத நாயகம் சாஸ்திரியார் போன்ற தமிழறிந்த பண்டிதர்களிலிருந்து படிப்பறியா பாமரர்கள் வரை பலர் கீர்த்தனைகளை உண்டு பண்ணினர். இன்று பல கீர்த்தனைகளை நாம் இழந்து விட்டாலும் கூட இப்போது இருப்பவற்றை பாடி பத்திரப்படுத்துவது அவசியமானது.
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனைகளின் தனிச்சிறப்பு என்று சொல்ல வேண்டுமானால் அதன் எளிமையே.